செய்திகள்
போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தபோது எடுத்த படம்

ரூ.50 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு- போலீசாருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் கைது

Published On 2020-10-13 02:33 GMT   |   Update On 2020-10-13 02:33 GMT
திருவேற்காடு அருகே ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி:

திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் அந்த பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானமாகவும் மற்றும் சிலர் அந்த இடத்தை பகுதி, பகுதியாக வாங்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று குடிசைமாற்று வாரிய துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த பகுதி முழுவதையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அந்த இடத்தை வாங்கியவர்கள் அங்கு குவிந்தனர்.

அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த இடத்தை பகுதி, பகுதியாக விற்பனை செய்யப்பட்டு ஏராளமானோர் வாங்கி வைத்துள்ளதாகவும், தற்போது இந்த இடம் குடிசை மாற்று வாரிய துறைக்கு சொந்தமான இடம் என கூறி அகற்றுவது கண்டனத்துக்கு உரியது என்றனர்.

அதற்கு அதிகாரிகள், இந்த பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட அரசு குடியிருப்புகள் வர உள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் இந்த பகுதியில் பொது மக்களின் தேவைக்காக அரசு மருத்துவமனை அல்லது வேறு ஏதாவது கட்டிடம் கட்ட வேண்டும். குடிசை மாற்று குடியிருப்புகள் கட்டக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அரசு நிலம் என தெரியாமல் அந்த இடத்தை பணம் கொடுத்து வாங்கி ஏமாந்த உரிமையாளர்களும் அங்கு வந்து இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த இடத்தில் இரண்டு பகுதிகளாக 700-க்கும் மேற்பட்ட அரசு குடியிருப்புகள் வர உள்ளதாகவும், தற்போது மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News