செய்திகள்
ஈரோடு அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி
ஈரோடு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சென்னிமலை மேற்கு தலவுமலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு கிளையில் டவுன் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்த பிறகு ரமேஷ் ஈரோட்டில் இருந்து தலவுமலை செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அவர் கஸ்பாபேட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவல்பூந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த கார், ரமேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த கார் சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.