செய்திகள்
நாகை மாவட்டத்தில் வருகிற 21-ந்தேதி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் வருகிற 21-ந்தேதி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் தமிழ்வாணன் வரவேற்றார். இதில் மாநில பொருளாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார்.
தொழிலாளர் விரோத போக்கை ஏற்படுத்தி வரும் நாகை வருவாய் கோட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் வருகிற 21-ந் தேதி நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 75 மருத்துவ, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ. 2 லட்சம் உடனே வழங்கிட வேண்டும். சங்கத்தின் அனைத்து வட்ட பேரவைகளை அக்டோபர் மாதத்திற்குள் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் ராஜூ, நடராஜன், ராணி, ஜம்ருத்நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.