செய்திகள்
அரியலூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
அரியலூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர் வட்டம், கடுகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் ரத்னா, சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான நிலம் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள், கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து வருவாய்த்துறையினர் மூலம் உரிய விசாரணை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த நிலத்தை காவனூர் கிராம நிர்வாக அலுவலர் ராணி, தனது சகோதரரான தனவேல் என்பவருக்கு தன்னிச்சையாக பட்டா வழங்க பரிந்துரை செய்தது, கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து காவனூர் கிராம நிர்வாக அலுவலர் ராணியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.