செய்திகள்
வேளாங்கண்ணி அருகே கார் மோதி வியாபாரி பலி
வேளாங்கண்ணி அருகே கார் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு குட்டியப்பபிள்ளைகட்டளை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவர் விறகு வியாபாரம் செய்து வந்தார். வியாபார சம்பந்தமாக திருத்துறைப்பூண்டியில் இருந்து திருப்பூண்டி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருப்பூண்டி அருகே சென்றபோது எதிரே நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார் தீடீரென எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வியாபாரி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்றவர் விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் நரேந்திரன் (23) என்பது தெரியவந்தது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.