செய்திகள்
அன்பழகன் எம்எல்ஏ

சூடு, சொரணை இல்லை என்று அமைச்சரே பேசுவதா?- அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம்

Published On 2020-10-04 05:16 GMT   |   Update On 2020-10-04 05:16 GMT
சூடு, சொரணை இல்லாமல் இருப்பதாக அமைச்சரே பேசி இருப்பது வெட்கக் கேடானது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. அதை நான் எதிர்க்கவில்லை. போராட்டங்கள் நடத்துவதற்காக மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் பல இடங்களை மாவட்ட நிர்வாகமே தேர்வு செய்து வைத்துள்ளது.

அந்த இடங்களில் நடத்தாமல் பழைய பஸ் நிலையம் அருகில், உழவர் சந்தைக்காக மக்கள் கூடும் பிரதான சாலையை மறித்து உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுபோல் மற்ற எந்த அரசியல் கட்சிக்காவது அங்கு சாலையை மறைத்து போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி வழங்குமா?

மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாத காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது வேதனையானது. இந்த சூழ்நிலையில் உண்ணாவிரதத்தில் பேசிய அமைச்சர் சூடு, சொரணை இல்லாமல் இருக்கிறோம் என்று பேசி இருப்பது வெட்க கேடானது. இவ்வாறு அமைச்சர் கூறுவது இந்த அரசின் பலவீனத்தை காட்டுகிறது.

முதல்-அமைச்சராக உள்ள நாராயணசாமி மக்கள் நலனை கருத்தில் கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளையும் மோதல் போக்கை கடைபிடிக்காமல் கவர்னர், மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும்.

தனிப்பட்ட கோப தாபங்களை தவிர்த்து, மக்கள் நலன், கொரோனா சிகிச்சைக்கு தேவையான நிதியுதவி ஆகியவற்றுக்காக கவர்னரை முதல்-அமைச்சர் சந்தித்து பேச வேண்டும். தற்போது மருத்துவ துறைக்கு அதிகப்படியான நிதி தேவை. எனவே பட்ஜெட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தேவையற்ற திட்ட நிதிகளை மக்கள் உயிர் காக்க எம்.எல்.ஏ.க்கள் அனுமதியோடு சுகாதாரத்துறைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News