செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் கொரோனா பரிசோதனை

Published On 2020-10-03 10:41 GMT   |   Update On 2020-10-03 10:41 GMT
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 100 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 150-ல் இருந்து 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று தினசரி பரிசோதனைகளின் சராசரி எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கென பிரத்யேகமான நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தினசரி பரிசோதனை திறன் 2,500 மாதிரிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நோய் பாதித்தவர்களை காலதாமதமின்றி கண்டறியும் வகையில் 113 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தினமும் 2 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

தினசரி சராசரியாக 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 12 பேருக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 12,793 பேருக்கு சளி, காய்ச்சலுடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா மாதிரி சேகரித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல கொரோனா பாதித்த 100 கர்ப்பிணிகளுக்கு இதுவரை உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு தாய்சேய் முழு நலத்துடன் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News