செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2020-10-01 06:20 GMT   |   Update On 2020-10-01 06:20 GMT
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத காரணத்தால் தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
பவானிசாகர்:

தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணையாகவும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணை. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத காரணத்தால் தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 173 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.80 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 483 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.82 அடியாக இருந்தது. தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் மழை பெய்யாததால், பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வழக்கம்போல் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
Tags:    

Similar News