செய்திகள்
கோப்புபடம்

முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-09-27 11:30 GMT   |   Update On 2020-09-27 11:30 GMT
புதுக்கோட்டையில் முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மறித்து பிடித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலாக இருந்து வருகிறது. நோய் தொற்றை தடுக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக கழுவ கிருமி நாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை அரசு வழங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகமும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அரசின் அறிவுரைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக் கப்படுகிறது.

முககவசம் அணியாதவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி மாவட்டத்தில் ஆங்காங்கே நடந்து வந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் சாலையில் முக கவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து கொரோனா பரிசோதனைக்கு நகராட்சி சுகாதார பணியாளர்கள் உட்படுத்தினர். இதற்காக ஆங்காங்கே மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் அருகே நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் நேற்று நின்றுக்கொண்டு, சாலையில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும், நடந்தும் வந்த பொதுமக்களை பிடித்து நிறுத்தி கொரோனா பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் இருந்து ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து, அவர்களது பெயர், விவரம், செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும் ஒரு சிலருக்கு அபராதம் விதித்து முக கவசங்களை வழங்கினர். காலை 10.30 மணி முதல் பகல் 12.45 மணி வரை மொத்தம் 100 பேரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டது. இதேபோல நகரப்பகுதியில் ஆங்காங்கே நடைபெற்றது.

இரு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை தூய்மை பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் விரட்டி, விரட்டி பிடித்தனர். இதில் சிலர் தப்பித்து வேகமாக சென்றதை காணமுடிந்தது. அதேநேரத்தில் வாகனங்களில் வந்தவர்கள் வண்டியை நிறுத்திய போது, பின்னால் வந்த வாகனங்கள் நிலைகுலைந்தது. போக்குவரத்தும் நெருக்கடி ஏற்பட்டது. முக கவசம் அணியாமல் வெளியில் வருவது தவறாகும். அதே நேரத்தில் அவர்களை பிடித்து அபராதம் விதிக்கும் போது மற்றவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி மன்றம் மற்றும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் இணைந்து மேற்கு தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தினர். முகாமில் ஏராளமான கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொண்டனர். அதே போல கொத்தமங்கலம் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூரில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் வாலிபர்கள் முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனைகள் செய்து கொண்டனர். இது குறித்து வாலிபர்கள் கூறும் போது, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் போது கொரோனா பரிசோதனை அவசியமாக கேட்கிறார்கள். கொரோனா இல்லை என்று சான்றிதழுடன் சென்றால் தான் வேலை உறுதி செய்யப்படுகிறது. அதனால் சிறப்பு முகாம்களில் பரிசோதனை செய்து கொள்கிறோம் என்றனர்.
Tags:    

Similar News