செய்திகள்
அமைச்சர் கே.சி.வீரமணி

சசிகலாவை எதிர்த்து தான் ஆட்சியும், கட்சியும் நடக்கிறது- அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி

Published On 2020-09-27 01:47 GMT   |   Update On 2020-09-27 01:47 GMT
அ.தி.மு.க.வுக்கு சசிகலா தேவையில்லை. அவரை எதிர்த்து தான் ஆட்சியும், கட்சியும் நடந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்கள் தாங்கள் வசிக்கும் கிராமங்களுக்கு ரேஷன் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன்பேரில் 60 குடும்ப அட்டைகள் இருக்கும் சிறிய கிராமங்களுக்கு கூட நகரும் ரேஷன் கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்திர பதிவுத்துறை நடைமுறையை எளிமையாக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்து விட்டு அங்கே சென்று பத்திரங்கள் பதிவு செய்யலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரங்கள் பதிவு செய்ய சில நாட்கள் ஆனது. ஆனால் தற்போது அவ்வவ்போது பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் பத்திரப்பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தும் திட்டங்கள் இருந்தால் அதனையும் ஆலோசித்து நடைமுறைப்படுத்துவோம்.

சசிகலாவை எதிர்த்து தான் கட்சியும், ஆட்சியும் நடந்து கொண்டு இருக்கிறது. சசிகலா தேவை இல்லாதவர். மக்களால் வெறுக்கப்பட கூடியவர். சசிகலா அ.தி.மு.க.விற்கு தேவையில்லை என்ற நிலையில் ஆட்சி நடந்து வருகிறது. அ.தி.மு.க.வினரை பொறுத்தவரையில் சசிகலா விஷயத்தில் தெளிவாக உள்ளனர். அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளருக்கு போட்டி, சர்ச்சை எதுவும் இல்லை. எல்லாம் சுபிட்சமாக நடந்து வருகிறது.

கொரோனா தொற்று காலத்தில் வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் வரை பத்திரப்பதிவு துறையின் வருமானம் குறைந்து காணப்பட்டது. தற்போது அதைவிட 10 சதவீதம் வருமானம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Tags:    

Similar News