செய்திகள்
கோப்புபடம்

இழப்பீடு தொகை வழங்கவில்லை எனக்கூறி ரிங்ரோடு விவசாயிகள் அதிகாரிகள் முற்றுகை

Published On 2020-09-26 13:44 GMT   |   Update On 2020-09-26 13:44 GMT
இழப்பீடு தொகை வழங்கவில்லை என்று கூறி ரிங்ரோடு விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு:

ஈரோடு திண்டல் மேடு (பெருந்துறை ரோடு) முதல் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டை வரை ரிங்ரோடு (சுற்று வட்டச்சாலை)அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. கொக்கராயன் பேட்டை முதல் லக்காபுரம் வரையும், லக்காபுரம் முதல் ஆனைக்கல்பாளையம் வரையும் பணிகள் முழுமையாக முடிந்து வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

ஆனைக்கல்பாளையம் முதல் ரங்கம்பாளையம்வரையும், ரங்கம்பாளையம் முதல் திண்டல் மேடு வரையும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்காரணமாக பணிகள் முழுமையாக முடியவில்லை. கிராமிய சாலைகள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் ஈரோடு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரிங்ரோடு வழக்குகள் தீர்வு காணப்பட்டு விரைவில் பணிகள் நிறைவடையும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து பணிகளை தொடங்கினர். ரங்கம்பாளையம் பகுதியில் தடையாக இருந்த வீடு அகற்றப்பட்டது.

இதுபோல் திண்டல் மேடு, பவளத்தாம்பாளையம் ஒட்டிய பகுதிகளில் ரிங்ரோடு நில அளவை செய்யப்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் நேற்று, அந்த பகுதி விவசாயிகள் கூடி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் என்பவர் கூறியதாவது:-

ரிங்ரோடு அமைக்கும் பணிக்காக, அதிகாரிகள் முறைகேடாக நிலம் கையகப்படுத்தும் வேலையில் ஈடுபடுகிறார்கள். விவசாய நிலங்களை விவசாயம் செய்யப்படாதவை என்று தவறாக குறிப்பிட்டு உள்ளனர். மனை அங்கீகாரம் பெற்ற நிலங்களையும் அங்கீகாரம் இல்லாததாக பதிவு செய்து உள்ளனர். இதனால் நில உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காது. எனவே முழுமையான இழப்பீடு தரும்வரை நிலம் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News