செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று குறித்து அலட்சியம் வேண்டாம்- நலவழித்துறை அதிகாரி எச்சரிக்கை

Published On 2020-09-23 06:12 GMT   |   Update On 2020-09-23 06:12 GMT
கொரோனா தொற்று முதியவர்களை மட்டுமின்றி இளைஞர்களையும் தாக்கும் நிலை உள்ளதால், பாதுகாப்பு விஷயத்தில் யாரும் அலட்சியம் காட்டவேண்டாம் என காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பரிசோதனைக்காக 16 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 1,889 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் (காரைக்கால்-33, வெளியூர்-2) சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இவர்களில் 20 பேருக்கு மேல், ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்தி அல்லது அறியாமல் இருந்து, மூச்சுத்திணறல் அதிகமான பிறகு மருத்துவமனைக்கு வந்து அரை மணி முதல் 5 மணி நேரத்திற்குள் இறந்தவர்கள் அதிகம். அதனால், மாவட்ட நலவழித்துறை அதிக அளவில் ஆர்.டி.பி.சி.ஆர், ஆண்டிஜென் முறைகளில் கொரோனா பரிசோதனை செய்துவருகிறது. இதுவரை பரிசோதனை செய்ததில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அதிகமானதால், வெளியிடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தொற்று அதிகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் இறப்பு சதவீதம் 1.6 என்ற அளவிலேயே உள்ளது. இது பல மாநிலங்களில் உள்ள நிலைதான்.

தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொது, தனியார் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் உரிய கண்காணிப்பும், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. கொரோனா முதியவர்களை மட்டுமின்றி இளைஞர்களையும் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா விஷயத்தில் யாரும் அலட்சியம் காட்டவேண்டாம். முககவசம் அணிவது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News