செய்திகள்
துப்பாக்கி சூடு

தீப்பெட்டி தராததால் ஆத்திரம்: நாட்டு துப்பாக்கியால் இளம்பெண்ணை சுட்ட வாலிபர்

Published On 2020-09-21 10:17 GMT   |   Update On 2020-09-21 10:17 GMT
இளம்பெண் மீது வாலிபர் நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம், கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பனந்தோப்பு மங்களம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேச்சேரி. இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 22).

நேற்று பச்சையம்மாள் வீட்டில் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான கோவிந்தராஜ் என்பவர் மகன் கார்த்திக் (17) வந்தார். குடிபோதையில் இருந்த அவர் , பச்சையம்மாள் வீட்டுக்கு வந்து அவரிடம் ‘தீப்பெட்டி இருந்தால் கொஞ்சம் கொடுங்கள்’ என்று கேட்டார். அதற்கு பச்சையம்மாள் ‘தீப்பெட்டி இல்லை’ என்று மறுத்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

இதை கேட்டு வாலிபர் கார்த்திக்குக்கு ஆத்திரம் வந்தது. பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்.

சிறிதுநேரம் கழித்து கார்த்திக், ஒரு நாட்டு துப்பாக்கியுடன் பச்சையம்மாள் வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டு வேலைகளை பார்த்து கொண்டிருந்த பச்சையம்மாளை நோக்கி நாட்டு துப்பாக்கியால் திடீரென ஆவேசத்துடன் சுட்டார். இதில் பச்சையம்மாளுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் அவர் அலறி துடித்தார்.

இதை பார்த்து வாலிபர் கார்த்திக், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்,

பின்னர் காயம் அடைந்த பச்சையம்மாளை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் கார்த்திக் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் கார்த்திக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.

இளம்பெண் மீது வாலிபர் நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம், கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News