செய்திகள்
பெரியார் சிலைக்கு திருமாவளவன் எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு - தமிழக அரசுக்கு திருமாவளவன் பாராட்டு

Published On 2020-09-17 09:45 GMT   |   Update On 2020-09-17 09:45 GMT
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

பெரியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி இன்று புதுச்சேரி சாரத்தில் உள்ள அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்.பி., “பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிக்க வேண்டும். பெரியார் பிறந்த நாளில் மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்துப் போராட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் நீட் தேர்வு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி மாணவர்களின் உயிரைப் பறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். தேர்வு முடிவுகள் வரும்போது எத்தனை பேரின் உயிரைப் பறிக்கும் என்று அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்த அவர் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அகில இந்திய அளவில் நீட் தேர்வைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது என்றும் அதனை புதுச்சேரி அரசும் பின்பற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
Tags:    

Similar News