செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் ஊராட்சியில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் தங்கி சுற்றியுள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கீவளூர் ஊராட்சியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பேர் சந்தேகம் படும்படி நின்று இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 27), ராஜேஷ் (27), லோகேஷ் (26), விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் அப்பகுதியில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.