செய்திகள்
முக ஸ்டாலின்

எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை- மு.க.ஸ்டாலின்

Published On 2020-09-14 07:00 GMT   |   Update On 2020-09-14 07:00 GMT
நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிய எனது கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம்  கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள், உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாஸ்க் அணிந்து பங்கேற்றனர். திமுக எம்பிக்கள் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட மாஸ்க் அணிந்திருந்தனர்.

இந்த ஆண்டு மரணம் அடைந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இன்று கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்பி உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் நாளைக்கு ஒத்திவைத்தார். 3 நாட்கள் மட்டுமே நடக்கும் சட்டசபையின் 2வது நாள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை.

நீட் தேர்வினால் தற்கொலை செய்த மாணவர்களுக்காகவும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டிக்கத்தக்கது.

புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்தும் பேச அனுமதி கோரியுள்ளோம். பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச வேண்டியுள்ளது. ஆனால் 2 நாட்கள் மட்டுமே சட்டசபை நடக்கிறது. 2 நாட்கள் போதாது என்று எதிர்க்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News