செய்திகள்
நடுவீரப்பட்டு அருகே மூச்சுத் திணறி குழந்தை மரணம்
நடுவீரப்பட்டு அருகே பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்குப்பம்:
நடுவீரப்பட்டு அருகே பாலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி கிரிஜா. இவர்களுக்கு 1½ வயதில் ஷஷ்மிதா என்கிற பெண் குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு சம்பவத்தன்று கிரிஜா பாட்டிலில் பால் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஷஷ்மிதாவை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷஷ்மிதா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது பற்றி நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பால் குடித்தபோது மூச்சு திணறி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.