செய்திகள்
கோப்புபடம்

நெய்வேலியில் தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2020-09-12 14:01 IST   |   Update On 2020-09-12 14:01:00 IST
நெய்வேலியில் தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெய்வேலி:

நெய்வேலி 3-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன்(வயது 60). ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணிலா(54). இவர் வடலூர் அருகே காட்டுக்கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெண்ணிலா வேலை சம்பந்தமாக பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென வெண்ணிலா ஓட்டி வந்த மொபட் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த மர்மநபர், வெண்ணிலா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக்கொண்டு, அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். நிலை தடுமாறி கீழே விழுந்த வெண்ணிலா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News