செய்திகள்
கோப்பு படம்.

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயற்சி

Published On 2020-09-12 08:09 GMT   |   Update On 2020-09-12 08:09 GMT
தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், அடிலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் தீபா அன்பழகன், துணைத்தலைவர் ராணி நாகராஜ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் 8 பேர் தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களை கோரிக்கை மனுக்களை கொடுக்க கலெக்டரிடம் அழைத்து சென்றனர். இந்த நிலையில் அங்கிருந்து மீண்டும் கலெக்டர் அலுவலக போர்டிகோ பகுதிக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது கலெக்டர் நேரில் சந்திக்க மறுத்ததால் தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்காமல் செல்லமாட்டோம் என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர். சுமார் 1 மணிநேரம் இந்த போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தர்மபுரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News