செய்திகள்
தேர்தல் ஆணையம்

வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை- தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2020-09-11 21:20 GMT   |   Update On 2020-09-11 21:20 GMT
வாக்குப்பதிவின்போது சமூக இடைவெளியை அதிகரிக்கும் நடவடிக்கையாக, வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை அடுத்து ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதை அடுத்து வரும் அக்டோபர் மாதத்தில் தொற்று மிக அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. அதைத் தொடர்ந்து ஜனவரி 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

2010-ம் ஆண்டு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் நடக்க இருக்கும் சட்டசபைக்கான பொதுதேர்தலில் இந்த பட்டியல்தான் இடம் பிடிக்கும். பொது தேர்தல் என்பதால் கூடுதல் வாக்காளர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகளும் அளிக்கப்படலாம்.

தற்போது தமிழகத்தில் முககவசம், சமூக இடைவெளி பராமரிப்பு போன்றவை கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன. இதை பின்பற்றாவிட்டால் குற்றம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியும் சுமார் 1,500 வாக்காளர்களைக் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. பொது தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவின்போது 1,500 வாக்காளர்களும் வாக்களிக்க நேரிட்டால் அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியுமா? சமூக இடைவெளியுடன் வாக்காளர்களை வாக்குச்சாவடி வளாகங்களில் நிற்க வைக்க முடியுமா? என்பது பற்றி இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

எனவே, வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை ஆயிரமாக குறைப்பது பற்றி ஆலோசிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (மாவட்ட கலெக்டர்கள்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வாக்குச்சாவடிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை குறைத்தால், கூடுதலாக எத்தனை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டியதிருக்கும்? புதிய வாக்குச்சாவடிகளை ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள வளாகத்திலேயே அமைக்க முடியுமா? புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் நிலையில் கூடுதலாக எத்தனை வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும்? என்பது பற்றியும் கணக்கிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News