செய்திகள்
படிக்க சொல்லி தந்தை திட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
பண்ருட்டி அருகே படிக்க சொல்லி தந்தை திட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே அரசடிகுப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ். தையல் தொழிலாளி. இவருடைய மகள் கவிமணி (வயது 16). பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் கவிமணி வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் கவிமணி வீட்டில் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ரமேஷ் ஆன்லைனில் பாடம் படிக்காமல், ஏன் படம் பார்த்து கொண்டு இருக்கிறாய். ஒழுங்காக பாடங்களை படி என கூறி திட்டியதாக தெரிகிறது இதில் மனமுடைந்த கவிமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி வீட்டில் இருந்த வயிற்று வலி சிகிச்சைக்கான மாத்திரைகளை அதிக அளவில் எடுத்து சாப்பிட்டதாக தெரிகிறது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவிமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.