செய்திகள்
மின்னல்

மயிலம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

Published On 2020-09-10 11:43 GMT   |   Update On 2020-09-10 11:43 GMT
மயிலம் அருகே மின்னல் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலம்:

மயிலம் அருகே உள்ள பெரியண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(வயது 65). விவசாயி. இவர் மற்றும் நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஜானகி(30), விஸ்வநாதன்(43), அவ்வையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமு(65) ஆகியோர் நேற்று அவ்வையார்குப்பத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். பின்னர் மாலையில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினர். மாலை 5 மணியளவில் திண்டிவனம்-அவ்வையார் குப்பம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதில் மின்னல் தாக்கியதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜானகி உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே முனுசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் தினேஷ் (17), பிளஸ்-2 மாணவர். இவர் தனது நிலத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் தினேஷ் மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் (45) என்பவர் தனக்கு சொந்தமான 2 காளை மாடுகளை அப்பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார். இதில் மின்னல் தாக்கியதில் அந்த 2 மாடுகளும் செத்தன.
Tags:    

Similar News