செய்திகள்
சுசீந்திரம் சோழன்தட்டன் அணையில் இருந்து தண்ணீர் செல்லும் காட்சி

பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

Published On 2020-09-10 16:02 IST   |   Update On 2020-09-10 16:02:00 IST
குமரி மாவட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் காலை 6 மணிக்கு தொடங்கிய மழை காலை 10.30 மணி வரை சாரல் மழையாகவும், மிதமான மழையாகவும் பெய்தது. அதன் பிறகு விட்டு விட்டு சாரல் மழையாக இருந்தது.

இந்த மழையால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், பல்வேறு பணிகளுக்காக வெளியே செல்பவர்கள் குடைபிடித்தபடி சென்றதை காண முடிந்தது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கோட்டு அணிந்தபடி சென்றனர். இந்த தொடர் மழையால் ஆறுகள், வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு-

பேச்சிப்பாறை- 11.4, பெருஞ்சாணி- 8.4, புத்தன் அணை- 7.2, சிற்றார் 1- 16.2, சிற்றார் 2- 22, மாம்பழத்துறையாறு- 6, முக்கடல்- 1.5, குழித்துறை- 12.8, நாகர்கோவில்- 2, சுருளக்கோடு- 2.6, தக்கலை-4, குளச்சல்- 6.4, இரணியல்- 4, பாலமோர்- 34.6, கோழிப்போர்விளை- 10, அடையாமடை- 5, குருந்தங்கோடு- 3.8, முள்ளங்கினாவிளை- 22, ஆனைக்கிடங்கு- 7.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிக பட்சமாக பாலமோர் பகுதியில் 34.6 அளவுக்கு மழை பதிவாகியது.

இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 370 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 295 கன அடியும், சிற்றார்-1 அணைக்கு 18 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 24 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 3 கன அடியும், முக்கடல் அணைக்கு ஒரு கன அடியும் தண்ணீர் வருகிறது.

இந்தநிலையில் பாசனத் தேவைக்காக நேற்று பேச்சிப்பாறை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 423 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Similar News