செய்திகள்
கோப்புபடம்

தாமிரபரணி குடிநீர் முழுமையாக வழங்கக்கோரி 21-ந் தேதி ஆர்ப்பாட்டம் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

Published On 2020-09-10 09:59 GMT   |   Update On 2020-09-10 09:59 GMT
வாசுதேவநல்லூர் பகுதிக்கு தாமிரபரணி குடிநீர் முழுமையாக வழங்கக்கோரி வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 16 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக சரிவர தண்ணீர் வழங்க முடியாமல் தினந்தோறும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் பயணியர் விடுதியில் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் பேரூர் தி.மு.க செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வாசுதேவநல்லூர் வட்டார செயலாளர் நடராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் முருகன், மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் தலைவர் தவமணி, ம.தி.மு.க வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மருதையா, தமிழ் மாநில காங்கிரஸ் நகர செயலாளர் போஸ் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தாமிரபரணி குடிநீரை முழுவதுமாக முறையாக வழங்க வேண்டும்.

பேரூராட்சி பகுதியில் உள்ள கிணற்றுத் தண்ணீரையும் தாமிரபரணி தண்ணீரையும் கலந்து வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News