செய்திகள்
சபாநாயகர் தனபால்

3 நாட்கள் நடைபெறும் சட்டசபையில் என்னென்ன நிகழ்வுகள்- சபாநாயகர் தனபால்

Published On 2020-09-08 07:30 GMT   |   Update On 2020-09-08 07:30 GMT
3 நாட்கள் நடைபெறும் தமிழக சட்டசபை கூட்டத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில், சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதாவது செப்டம்பர் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் சட்டசபை கூட்டத்தொடருக்கு 72 மணி நேரத்துக்கு முன் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால் கூறியதாவது:- சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறும். செப். 14-ம் தேதி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டசபை காலை 10 மணிக்கு கூடும், கேள்வி நேரம் இடம்பெறும். செப்.15ம் தேதி மானிய கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பேரவை கூட்டம் தொடங்கும் முன்பு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News