செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

பிடிக்காததை திணித்தால் தாமரை மலருமா?- வானதி சீனிவாசன் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

Published On 2020-09-08 06:53 GMT   |   Update On 2020-09-08 06:53 GMT
‘பிடிக்காததை திணித்தால் தாமரை மலருமா?’ என்று பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கருத்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் மொழி அரசியல் சூடுபிடித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு டிரண்டிங் ஆனது.

ஏற்கனவே இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து வரும் நிலையில் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

தி.மு.க. எம்.பி.கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தி திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்ட போது யாரும் எதிர்பாராத அளவுக்கு இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்தது அல்ல என்று குறிப்பிட்டார். இதையடுத்து அரசியல் ரீதியாக இந்த விவகாரம் சூடு பிடித்தது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும், இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார்.

இந்தநிலையில் பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘டீசர்ட் அணிந்தால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது’ என்று கூறினார்.

இந்தநிலையில் மத்திய அரசு அதிகாரி பாலமுருகன் இந்தி தெரியாத நிலையில் அவரை இந்தி மொழி பரப்பும் துறையில் பணி அமர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.

இதுபற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வானதி சீனிவாசனுக்கு கிண்டலாக தனது டுவிட்டர் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த அதிகாரியின் கடிதத்தை மேற்கோள் காட்டி அதை படியுங்கள். ‘பிடிக்காததை திணித்தால் (தாமரை) மலருமா? மன்னிக்கவும் வளருமா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News