செய்திகள்
நெய்வேலி, வேப்பூரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
நெய்வேலி, வேப்பூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி
நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் இந்திராநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகமான முறையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் இந்திராநகர் பீ 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த சேகர் மகன் ரகு என்கிற பாஸ்கர் (வயது 29), வடக்குத்து மாருதி நகரைச்சேர்ந்த லூர்துசாமி மகன் வினோத் (24), ஏ பிளாக் மாற்றுக்குடியிருப்பை சேர்ந்த முருகேசன் மகன் எலி என்கிற அய்யப்பன் (24) ஆகிய 3 பேர் என்றும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 500 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனர். வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று கண்டப்பங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோ.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 32) என்றும், அவர் சுற்றுப்புற கிராமங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை சோதனைசெய்த போது, அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.