செய்திகள்
கோப்புபடம்

கடலூர் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.19½ லட்சம் மோசடி - ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் கைது

Published On 2020-09-07 06:22 GMT   |   Update On 2020-09-07 06:22 GMT
கடலூர் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.19½ லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆயுதப்படை போலீஸ்காரரை தேடி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் புதுஉப்பலவாடியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ஜானகிராமன் (வயது 27). இவர் தற்போது சென்னை அய்யப்பன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற்று தரும் மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடலூர் பாரதிசாலையில் உள்ள செயல்பட்டு வரும் அடகு வைத்த நகைகளை மீட்டு விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த கிளை மேலாளர் விஸ்வநாதன் (33) என்பவரிடம் தன்னுடைய 629 கிராம் நகைகளை (78½ பவுன்) இம்பீரியல் சாலையில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்துள்ளதாகவும், அந்த நகைகளை மீட்டு மீதியுள்ள நகைகளுக்கு பணத்தை தருமாறு கேட்டார். இதை நம்பிய கிளை மேலாளர் விஸ்வநாதன், சம்பந்தப்பட்ட தனியார் வங்கி கிளைக்கு ரூ.19 லட்சத்து 47 ஆயிரத்தை அனுப்பினார். பின்னர் நகையை வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட வங்கிக்கு ஜானகிராமனுடன் விஸ்வநாதன் சென்றார்.

அப்போது அவருடன் சென்னை டி.பி.சத்திரம் மகாலிங்கம் மகன் முத்துக்குமார், சென்னை ஆவடி 2-வது தெரு ரமேஷ் மகன் ரியல் எஸ்டேட் அதிபர் முருகன் (42) ஆகிய 2 பேரும் உடன் சென்றனர். பின்னர் வங்கிக்கு சென்று ஜானகிராமன் நகைகளை மீட்டு விஸ்வநாதனிடம் கொடுக்காமல், அவரது நண்பர்கள் முத்துக்குமார், முருகனிடம் கொடுத்து அனுப்பி மோசடி செய்து விட்டு 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இது பற்றி விஸ்வநாதன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த ஜானகிராமன், முருகன் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனர். ஆயுதப்படை போலீஸ்காரரான இவர் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News