செய்திகள்
கோப்புபடம்

4 பேர் மீது தாக்குதல் - பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு

Published On 2020-09-02 17:44 IST   |   Update On 2020-09-02 17:44:00 IST
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே 4 பேர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பெண்கள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அழிசுகுடி அய்யனார் கோவில் அருகே ராஜசேகர் என்பவர் தனது நண்பர்கள் சிரஞ்சீவி, ரஞ்சித் மற்றும் ஜீவா(வயது 20) ஆகியோருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அதே ஊரை சேர்ந்த ரகு என்ற ரகுவரன், சுந்தரபாண்டியன் ஆகியோர், ராஜசேகர் மற்றும் அவருடைய நண்பர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து போகச்சொல்லி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ராஜசேகர் உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து போக மறுத்துள்ளனர். இதையடுத்து மறுநாள் அய்யனார் கோவில் அருகே ராஜசேகர் மற்றும் அவருடைய நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களை ரகு, சுந்தரபாண்டியன், ராதாகிருஷ்ணன், ராணி, அமுதா, சுப்ரமணியன், கலியபெருமாள், ஜெயலட்சுமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, உருட்டுக் கட்டைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜீவா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 3 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக தெரிகிறது. இது குறித்து ராஜசேகர், தா.பழூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News