செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறு, குறு விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் போலியான பெயர்களை சேர்த்து மோசடி செய்த வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்தும், அவர்களை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
50 டன்னுக்கு மேலாக சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு அரியலூர், ஜெயங்கொண்டம் வழியாக ஆண்டிமடம் செல்லும் கனரக வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலை வீணாவதுடன், ஜெயங்கொண்டம் 4 ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் இளவரசன் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் கண்டனம் தெரிவித்து பேசினார். ஒன்றிய செயலாளர் சங்குபாலன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் ஜெயங்கொண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.