செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட கோவில்கள் - பக்தர்கள் சாமி தரிசனம்
அரியலூர் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு காரணமாக கோவில்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பின்னர் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வருமானமுள்ள கோவில்கள் மட்டும் அரசு அறிவிப்பின்படி திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்து அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 5 மாதங்களுக்கு பின் கோவில்கள் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் கோதண்டராமசாமி கோவில், ஆலந்துறையார் கோவில், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம் ஆகியவற்றை தட்டில் வைத்திருந்தனர். அதில் இருந்து அவற்றை பக்தர்கள் எடுத்து கொண்டனர்.
மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் நேற்று பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாத பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக கோவில் பிரகார நடைபாதையில் சுண்ணாம்பு கொண்டு வட்டமிட்டு பக்தர்கள் நிற்க வைக்கப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் முகவரியை குறித்து வைத்துக்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்த பிறகே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாதங்களுக்குப் பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மாவட்ட பகுதியில் உள்ள அனைத்து வழிப்பாட்டு தலங்களும் நேற்று திறக்கப்பட்டன.