செய்திகள்
திருச்சி-சிதம்பரம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஜெயங்கொண்டத்தில், திருச்சி-சிதம்பரம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திருச்சி-சிதம்பரம் சாலையில் எதிர் எதிரே அமைந்துள்ள 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் பெட்ரோல், டீசல் நிரப்ப வந்து செல்கின்றன. இதே சாலையில் சினிமா தியேட்டர், மருத்துவமனை, வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், ஓட்டல்கள், வாகனம் பழுது நீக்கும் கடைகள், பள்ளிகள் உள்ளன. இங்கு செல்லவும், கும்பகோணம், குறுக்கு ரோடு, மீன்சுருட்டி, சேத்தியாத்தோப்பு, கடலூர், வடலூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவும் இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இதே சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் நகராட்சியில் பணிபுரியும் டிரைவர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், வாலிபர்கள் பலர் இந்த இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளனர். ஜெயங்கொண்டம் கிளை தெருவை சேர்ந்த முதியவர் ஒருவர் இந்த இடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மேலும், இந்த சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிக வேகத்துடன் சென்று வருவதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
ஆகவே, இந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.