செய்திகள்
தரைக்கடைகளில் இறைச்சி, மீன், பூக்கள் பறிமுதல்- வியாபாரிகளுக்கு அபராதம்
ஜெயங்கொண்டத்தில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி தரைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட இறைச்சி, மீன், பூக்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
உலகத்தில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், விதிமுறைகளை மீறி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விருத்தாசலம் ரோடு, சிதம்பரம் ரோடு, அம்பேத்கர் நகர் மற்றும் செந்துறை சாலைகளில் மீன், இறைச்சி, டீ, பூ விற்பனை நடைபெற்றது. இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நகர்ப்புற பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சிதம்பரம் சாலை மற்றும் விருத்தாசலம் சாலைகளில் சிலர் தரைக்கடைகள் வைத்து மீன் மற்றும் இறைச்சி, டீ, பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். முழு ஊரடங்கு பற்றி விளக்கமாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டும், அரசு உத்தரவை மதிக்காமல் முழு ஊரடங்கன்று விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்தது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது போன்றவற்றுக்காக கடைகளில் இருந்த ஆட்டு இறைச்சி, மீன்கள், டீ கேன்கள், பூக்கள், மாலைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் நகர் முழுவதும் 26 கடைகளுக்கு ரூ.10 ஆயிரத்து 600 அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது. மேலும் இதுபோல் விதிமுறைகளை மீறாமல், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி அரசு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், நடேசன், தமிழரசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பாண்டியன், தம்பிசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.