செய்திகள்
தூய்மை பணியாளர் ஒருவருக்கு கலெக்டர், பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கியபோது எடுத்த படம்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு

Published On 2020-08-22 14:04 GMT   |   Update On 2020-08-22 14:04 GMT
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கவுரவித்து பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தூய்மை காவலர்கள் 612 பேர், தூய்மை பணியாளர்கள் 79 பேர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தும், நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவை மிகவும் மகத்தான பணியாகும். கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமல்லாமல், அனைத்து பகுதிகளுக்கும் சென்று தன்னலம் கருதாமல் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் போன்றவற்றை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை கருத்தில் கொண்டு தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் அடிக்கடி கை கழுவுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரமேஷ், சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News