செய்திகள்
கைது

ஊட்டியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

Published On 2020-08-22 13:35 GMT   |   Update On 2020-08-22 13:35 GMT
சொத்துவரி விதிப்புக்கு அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊட்டி நகராட்சி வருவாய் உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக வீடு கட்டினால் அளவீடு செய்து சொத்து வரி எவ்வளவு விதிப்பது என்று அதிகாரிகள் நிர்ணயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட தீட்டுக்கல் பகுதியில் பிரபு என்பவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இவர் தனது வீட்டுக்கு சொத்துவரி விதிப்பது தொடர்பாக அளவீடு செய்யுமாறு நகராட்சி வருவாய் பிரிவில் தெரிவித்து உள்ளார்.

வருவாய் உதவியாளர் சத்திய ஆரோக்கியநாதன் (வயது 48) சொத்துவரி விதிப்புக்கு அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரபுவிடம் கொடுத்து, அதை வருவாய் உதவியாளரிடம் கொடுக்க சொன்னார்கள்.

இதையடுத்து நேற்று பிரபு, நகராட்சி அலுவலகத்துக்கு சென்று, வருவாய் உதவியாளர் சத்திய ஆரோக்கியநாதன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், சாதனபிரியா மற்றும் போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் அங்கு சோதனையும் செய்யப்பட்டது. அப்போது அங்கு இருந்த ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அத்துடன் யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை. இந்த சோதனையின்போது சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News