செய்திகள்
கறம்பக்குடி மின்வாரிய அலுவலகம் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா

Published On 2020-08-20 13:08 IST   |   Update On 2020-08-20 13:08:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் சராசரியாக 100-ஐ தாண்டி வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று வெளியான பட்டியலில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 130 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 142 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான ராஜநாயகத்தித்திற்கும், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் பலியானார். இதனால் இறப்பு எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

கறம்பக்குடியில், கடலை மில் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கடலை மில் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கறம்பக்குடியில் ஏற்கனவே, 3 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4-ஆக அதிகரித்து உள்ளது.

மேலும், கறம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் 30 வயது ஊழியர் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதால் மின் வாரிய அலுவலகம் மூடப்பட்டது. முன்னதாக, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அரிமளம் ஒன்றியம், கே.செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால் அவர், புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரும்பாநாடு கிராமத்தில் நேற்று 53 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆதனக்கோட்டையில் 24 வயது ஆண் ஒருவருக்கும், கூத்தாட்சிப்பட்டியில் 60 வயது மூதாட்டிக்கும், எம்.ஜி.ஆர். நகரில் 24 வயது ஆண் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

Similar News