செய்திகள்
அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

இறப்பு எண்ணிக்கையில் 10 சதவீதம் மட்டுமே கொரோனா தொற்றால் இறந்தவர்கள் - விஜயபாஸ்கர்

Published On 2020-08-17 01:50 IST   |   Update On 2020-08-17 01:50:00 IST
தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர் மட்டுமே நேரடியாக கொரோனா தொற்றால் இறந்தவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கொரோனா பரவல் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.  அதன்பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: 

கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் தமிழகத்தில் அதிக வேகத்தில் பணியாற்றி வருகிறோம். இதுவரை 36 லட்சம் பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. 2.72 லட்சம் பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1.29 லட்சம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இறப்பு எண்ணிக்கை குறித்த பீதி தேவையில்லை. இப்போது வெளியிடப்படும் இறந்தவர்களின் பட்டியலில் 10 சதவீதம் பேர் மட்டுமே நேரடி கொரோனா தொற்றால் இறந்தவர்கள். மற்றவர்கள் இணை நோய்களையும் கொண்டவர்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதல்களின்படி இவர்களையும் கொரோனா இறப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அதேநேரத்தில் லேசான அறிகுறிகள் தென்படும்போதே அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அரசு மருத்துவர்கள் சவால் இன்றி சிகிச்சை அளிக்க முடியும். இதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். அதேபோல, குணமடைந்து வீடு திரும்பியோருக்கு வேறு எந்த நோயும் தொற்றாமல் இருப்பதற்கான ஆலோசனைகளை வழங்க தனி மருத்துவப் பிரிவு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

புதுக்கோட்டை மாவட்டத்திலும் கூட இறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 59 பேரில், 51 பேருக்கு இணை நோய்கள் உள்ளன. 8 பேர் மட்டுமே வேறு எந்த இணை நோயும் இல்லாமல் கொரோனா தொற்றால் மட்டுமே உயிரிழந்தவர்கள் என தெரிவித்தார்.

Similar News