செய்திகள்
பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்ற போது எடுத்த படம்.

வடிகால் வசதி கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி

Published On 2020-08-10 07:15 GMT   |   Update On 2020-08-10 07:15 GMT
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராமத்தில் வடிகால் வசதி கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராமம் உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையில் சாத்தம்பாடியில் உள்ள வடக்கு தெருவில் உள்ள சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீர் வழிந்தோடுவதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததாலும், மழைநீர் செல்லுமிடத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாலுமே மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் வடிகால் வசதி வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் கூறியும், மனுக்கள் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று ஒன்றுகூடிய வடக்குத்தெரு பொதுமக்கள், வடிகால் வசதி கேட்டு அரியலூர் முத்துவாஞ்சேரி சாலையில் தடுப்புகளை அமைத்து சாலை மறியல் செய்ய முயன்றனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சாத்தம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வழிந்தோடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்ட முடிவை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News