செய்திகள்
ஏரியூர் அருகே காவிரி ஆற்றில் அனுமதியின்றி இயக்கப்பட்ட பரிசல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது எடுத்தபடம்.

காவிரி ஆற்றில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 4 பரிசல்கள் பறிமுதல்

Published On 2020-08-06 15:11 GMT   |   Update On 2020-08-06 15:11 GMT
‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலியாக ஏரியூர் அருகே காவிரி ஆற்றில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 4 பரிசல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏரியூர்:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பஸ், ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் கோட்டையூர் முதல் தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர் வரையிலான காவிரி ஆற்றுப்பகுதியை உரிய அனுமதியின்றி பரிசல்கள் மூலம் பலர் கடந்து வந்தனர்.

இதன் காரணமாக ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. தர்மபுரி-சேலம் மாவட்டங்களிடையே காவிரி ஆற்றில் உரிய அனுமதியின்றி பரிசல்கள் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று ஏரியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பான செய்தி படத்துடன் ‘தினத்தந்தி‘யில் வெளியானது. அதன் எதிரொலியாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவுப்படி பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம் மற்றும் வருவாய்த்துறையினர் ஏரியூரை அடுத்த நாகமரை பகுதியில் உள்ள ஒட்டனூர்-கோட்டையூர் பரிசல் துறையில் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அங்கு இயக்கத்திற்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பரிசல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பரிசல்களை அனுமதியின்றி இயக்கியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி பரிசல்களை இயக்கிய பெரியசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News