செய்திகள்
கலெக்டர் பிரவீன்நாயர்

விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கு பயிற்சி: கலெக்டர் தகவல்

Published On 2020-08-02 20:55 IST   |   Update On 2020-08-02 20:55:00 IST
நாகை மாவட்டத்தில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தை சேர்ந்த 15 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதிற்கு உட்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தடகளம், ஆக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான நுழைவு படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பயிற்சியாளர்கள் விளையாட்டரங்கில் தங்களது முழு விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அனைவரும் முககவசத்தை கட்டாயம் அணிந்து வரவேண்டும். பயிற்சி மேற்கொள்ள வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். இதற்கென தனிக்குழு அமைத்து சோதனை மேற்கொள்ளப்படும். பயிற்சிக்கு முன்பும், பயிற்சி முடித்த பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்படுவதற்கான தடை தொடர்கிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News