செய்திகள்
நெல்லையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மூதாட்டி பலி
நெல்லையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மூதாட்டியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை கீழத்தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 78). இவர் நெல்லையில் உள்ள பழக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ருக்மணி (72). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. எனவே தர்மலிங்கம், ருக்மணி ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவில் தர்மலிங்கத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
கணவரின் உடலைப் பார்த்து ருக்மணி இரவு முழுவதும் கதறி அழுதவாறு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அவரும் பரிதாபமாக இறந் தார். கணவரின் பிரிவை தாங்காமல் மனைவியும் உயிரை விட்டதை அறிந்த உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து, அவர்களது உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாலையில் தர்மலிங்கம், ருக்மணி ஆகியோரின் உடல்களை ஊர்வலமாக எடுத்து சென்று, உடையார்பட்டி மயானத்தில் ஒரே நேரத்தில் தகனம் செய்தனர். கணவர் இறந்த அதிர்ச்சியில் மூதாட்டியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.