செய்திகள்
சிறு, குறு தொழில்களுக்கு ரூ.1,069 கோடி கடன் வழங்க இலக்கு- திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்
தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.1,069 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் மலர்விழி தெரிவித்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வங்கியாளர்கள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி 2020-2021 ஆண்டில் வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையை ரூ.5,401.64 கோடி அளவிலான கடன் திட்டங்களுடன் தயாரித்து உள்ளது.
இந்த அறிக்கை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் மலர்விழி வெளியிட முதல் பிரதியை வங்கியின் மண்டல மேலாளர் திருமாவளவன் முன்னிலையில் திட்ட இயக்குனர் ஆர்த்தி பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராமமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் உள்பட அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-
நபார்டு வங்கி தயாரித்த வளம் சார்ந்த கடன் திட்டத்தை கணக்கில் கொண்டு இந்த கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை கடன் திட்டங்களுக்காக ரூ.4,757.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை கடன் திட்டங்களுக்காக ரூ.3,687.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை முதலீட்டு கடன்களுக்கு ரூ.1156 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.1,069 கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்த கடன் அளவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட வர்த்தக வங்கிகளின் பங்கு ரூ.4,476 கோடியாகவும், கூட்டுறவு வங்கிகளின் பங்கு ரூ.345 கோடியாகவும், தமிழ்நாடு கிராம வங்கியின் பங்கு ரூ.476 கோடியாகவும் உள்ளது. வங்கியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கடன் திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட கடன்களை வழங்குவதற்கான அனைத்து இலக்குகளையும் எட்ட வேண்டும். அனைத்து அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.