செய்திகள்
வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில்உள்ள கொள்ளுக்குடிப்பட்டிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகளை படத்தில் காணலாம்

வெளிநாட்டு பறவை வருகையும்.... கிராம மக்கள் நம்பிக்கையும்...

Published On 2020-08-01 08:53 IST   |   Update On 2020-08-01 08:53:00 IST
திருப்பத்தூர் அருகே கொள்ளுக்குடிப்பட்டிக்கு ஆண்டுதோறும் பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தால் அந்த ஆண்டு விவசாயம் நன்கு செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும்.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலய பகுதியில் கொள்ளுக்குடிப்பட்டி கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் 38 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கண்மாயில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பறவைகள், இங்கு வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து செல்லும்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் இந்த பகுதிக்கு வரும். பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் நாடு திரும்பும். இவ்வாறு ஆண்டுதோறும் பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தால் அந்த ஆண்டு விவசாயம் நன்கு செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும்.

இந்த சரணாலயத்திற்கு உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீர்ச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட ஏராளமான வகை பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. இந்த பகுதியில் போதிய மழையில்லாததால் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த அளவில் வந்த பறவைகள் கூடு கட்டாமலேயே டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே திரும்பி சென்றன.

ஆனால், தற்போது சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த கண்மாயில் தண்ணீர் பெருகியதுடன் இந்த பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. எனவே இந்த ஆண்டு சீசனுக்கு முன்னதாகவே வெளிநாட்டு பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்துள்ளன.

இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் எங்கள் கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம். எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளில் குழந்தைபோல் இந்த பறவைகளை பாவித்து வருகிறோம்.

இந்த பறவைகளுக்காகவே எங்கள் கிராமத்தில் தீபாவளி தினத்தன்று அதிக சத்ததுடன் வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் இரவு நேர பட்டாசுகளை வெடிக்காமல் இன்று வரை கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறோம். பொதுவாக எங்கள் கிராமத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வந்தால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது இன்றளவும் நம்பிக்கை. இந்த ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. எனவே இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News