செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு அருகே ரெயில் தண்டவாளத்தில் கல் வைத்த வாலிபர் கைது

Published On 2020-07-31 13:22 IST   |   Update On 2020-07-31 13:22:00 IST
ஈரோடு அருகே ரெயில் தண்டவாளத்தில் கல் வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி-மாவேலிபாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையே செம்மங்குளம் கருமாவுரம் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் சுமார் 4 கிலோ எடை கொண்ட கல் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு ரெயில் அந்த கல்லில் மோதி நின்றது.

இதைத்தொடர்ந்து ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க கோவை ரெயில்வே கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை செம்மங்குளம் பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஒருக்காமலை பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் என்பதும், இவர் தான் ரெயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து நாசவேலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். குற்றவாளியை விரைவில் கைது செய்த தனிப்படை போலீசாரை ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.

Similar News