செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா தொற்றை தடுக்க சிக்ரி குழுமம் கூட்டு ஆராய்ச்சி - தொழில் நுட்ப குழு தலைவர் தகவல்

Published On 2020-07-29 15:49 IST   |   Update On 2020-07-29 15:49:00 IST
கொரோனா நோய் தொற்றை தடுக்க சிக்ரி குழுமத்தோடு கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாக தொழில் நுட்ப குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) 73-வது நிறுவன நாள் விழா நடைபெற்றது. இணைய வழியில் நடைபெற்ற விழாவிற்கு புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழும செயலர் சேகர் சி மாண்டே தலைமை தாங்கினார். காரைக்குடி சிக்ரி இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப குழுவின் தலைவர் அஜித்வி சாப்ரே கலந்துகொண்டு தற்சார்பு இந்தியாவில் கல்வி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- வருங்காலத்தில் நமது தொழில் நுட்ப உத்திகளை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்பங்களை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் தற்சார்பு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இதற்கு உதாரணமாக அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுமத்தின் ஆய்வகங்களான காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம், டெராடூனில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பெட்ரோலியம், புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகம் ஆகியவை கார்பன்டை ஆக்சைடை சேகரித்தல் மற்றும் அதனை எரிபொருளாக மாற்றம் செய்தல், மின்கலம் மற்றும் எரிபொருள் மின்கலத்துறை மூலம் பென்சீன் பிரித்தெடுத்தல், உயிரி எரிபொருள், மின்கலம் ஆகிய துறைகளில் நடத்தி வரும் ஆராய்ச்சிகளை மேற்கோளாக கொள்ளலாம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப துறையில் கழிவில் இருந்து மறுசுழற்சி செய்வதன் மூலம் பயனுள்ள பொருட்களை பாசிகள் மூலம் லாபகரமாக உற்பத்தி செய்கிறது. தற்சார்பு பொருளாதாரத்தை அடைதலின் ஒரு பகுதியாக தற்போது உள்ள கொரோனா நோய் தொற்றுக்காக மருந்து பொருளை மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்ய சி.எஸ்.ஐ.ஆர்(சிக்ரி) குழுமங்களில் ஒன்றான புனேயில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இண்டெக்ரேடிவ் மெடிசின் ஆய்வகத்துடன் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் வினையூக்கி விரிசல் வழியாக வாயுவாக்கம் தொழில் நுட்பத்தில் வாயுயிறக்கம் செய்து அந்த தொழில் நுட்பத்தின் மூலம் தற்சார்பு பொருளாதாரத்தை அடைய முடியும். மனித சக்தி டிஜிட்டல் மற்றும் உயிரியல் சக்தி மூலம் 4-வது தொழில் புரட்சியை இந்தியாவில் ஏற்படுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். அதன் பின்னர் சிக்ரி வளாகத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பி.டெக் மாணவிகள் விடுதியை திறந்து வைத்தார். தொழில் ஆராய்ச்சி குழுமத்தின் செயலர் சேகர் சி மாண்டே சிக்ரி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். விழாவில் கவுரவ விருந்தினர்களாக சென்னை பிராட்லைன் டெக்னாலஜீஸ் முதல்வர் ஆறுமுகம், ஐதராபாத் ஐ.ஐ.டி. பேராசிரியர் முனைவர் நிஷாந்த்டொங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் முதன்மை விஞ்ஞானி வேலாயுதம் நன்றி கூறினார்.

Similar News