செய்திகள்
வறுமையால் குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பி வைத்த பெற்றோர்

வறுமையால் குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பி வைத்த பெற்றோர்

Published On 2020-07-29 08:44 IST   |   Update On 2020-07-29 08:44:00 IST
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர்கள் வறுமையால் தங்களது குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஈரோடு :

ஈரோடு ரெயில்வே காலனி பகுதியில் 4 சிறுமிகள் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் ஈரோடு ரெயில்வே சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அந்த அமைப்பை சார்ந்த ரீடு தொண்டு நிறுவனத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமிகளிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமிகள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெற்றோர் ஈரோடு சோலார் பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அதன்பின்னர் சைல்டுலைன் அமைப்பினர் அங்கு சென்றும் விசாரித்தனர்.

அங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் வசித்து வருவதும், அவர்கள் வேலையின்றி இருந்து வந்ததால் தங்களது குழந்தைகளையே பிச்சை எடுக்க அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சோலார் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு எத்தனை பேர் வசிக்கிறார்கள்? அதில் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது? போன்ற விவரங்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும், உரிய நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News