செய்திகள்
வீட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் திடீர் போராட்டம் - தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் பரபரப்பு

Published On 2020-07-26 14:34 IST   |   Update On 2020-07-26 14:34:00 IST
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அடுக்கம்பாறை, குடியாத்தம், வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைகள், சி.எம்.சி.மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காணப்படும் 40 வயதுக்கு உட்பட்ட நபர்கள் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

அங்கு அவர்களின் விருப்பத்தின்பேரில் சித்த, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அலோபதி முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 10 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் அலோபதி முறையில் சிகிச்சை பெற்ற 20 பேரை நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்தது. அப்போது அவர்களுடன் அலோபதி முறையில் சிகிச்சை பெற்ற சிலர் தங்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு மருத்துவர்கள், 20 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. அதனால் அவர்கள் வீட்டிற்கு செல்கிறார்கள். மற்ற நபர்கள் மேலும் சில நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

அதனை ஏற்காமல் அலோபதி முறையில் சிகிச்சை பெற்ற மற்ற நபர்கள் திடீரென தங்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், டாக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று குணமடைந்த 20 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News