செய்திகள்
திமுக எம்எல்ஏ இதயவர்மன்

திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு- தி.மு.க. எம்.எல்.ஏ.வின் தந்தை தலைமறைவு

Published On 2020-07-23 15:29 GMT   |   Update On 2020-07-23 15:29 GMT
திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் தந்தை தலைமறைவானார்.
திருப்போரூர்:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் நிலத்தகராறு மோதலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். எம்.எல்.ஏ. இதயவர்மன் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் மனு செய்தார். அவரது ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

எம்.எல்.ஏ. இதயவர்மன் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துப்பாக்கிச்சூடு நடந்த செங்காடு கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

எம்.எல்.ஏ. இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி (வயது 70) ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். அவருடன் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், துளசி, மணி, ஞான சேகரன் ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்த சீனிவாசன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு தரப்பான ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இமயம்குமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த தங்கராசு, சிவகுமார், ஆறுமுகம், தேவராஜ், மோகன், பிரேம்குமார் உள்ளிட்ட 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களும் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.
Tags:    

Similar News