செய்திகள்
கோப்புபடம்

தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு

Published On 2020-07-22 17:58 IST   |   Update On 2020-07-22 17:58:00 IST
திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் அம்மன் கோவில் நிலத்தில் பாதை அமைப்பது தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த வழியாக சென்ற கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்தார்.

இந்த மோதல் தொடர்பாக எம்.எல்.ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களும், இமயம்குமார் தரப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி பயன்படுத்திய 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகேட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதற்காக திருப்போரூர் போலீசார், எம்.எல்.ஏ. இதயவர்மனை பூந்தமல்லி தனி கிளை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

மனுவை விசாரணை செய்த நீதிபதி, எம்.எல்.ஏ. இதயவர்மனை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் போலீசார் தனியார் மண்டபத்தில் வைத்து எம்.எல்.ஏ. இதயவர்மனிடம் விசாரணை நடத்தினர்.

Similar News