செய்திகள்
தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
காட்டாங்கொளத்தூரில் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் பள்ளி திறக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவை மீறி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை நிர்ப்பந்தம் செய்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெற்றோர், கோர்ட்டு உத்தரவுபடி 40 சதவீத கல்வி கட்டணத்தை நாங்கள் செலுத்துகிறோம். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.